சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை!
என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு
வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா என்ற வாதத்திற்குள்
போகாமல் நாம் மேலே செல்வோம். பண்டைத் தமிழகத்தில் கோலோச்சிய
இச்சமயம் இன்று மிக அருகிவிட்டது. தற்போதைய கணக்கின்படி சுமார்
ஒரு இலட்சம் தமிழ்ச் சமணர்களே வாழ்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றும் அவ்வகையான பழிப்புரைகளை
நம்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தங்கள் கருத்திற்கும் ஆதாரமாகவும் கூறிக்கொள்கிறார்கள். சிலர், இவ்வகையான பழிப்புரைகளை கூறுகிறோமே
அவற்றுக்கு ஆதாரம் ஏதேனுமுண்டா என்று ஆராய்ந்துப் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர், அவ்வகையான பழிப்புரைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும்
இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.
இவ்வகையான பழிப்புரைகளை ஒரே வாக்கியத்தின் மூலம் புறம்
தள்ளிவிடலாம். இந்திய வரலாற்றின் ஆவணப்படி (மொஹிஞ்சதாரோ –
ஹரப்பா தவிர்த்து) சமண சிலைகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் காணக்கிடைக்கின்றன. சிலைகள் என்றால் வழிபாடு இருந்திருக்கும் என்று சொல்லவேண்டுவதில்லை. :-)(ஆதாரம்: மதுரா அகழ்வாராய்ச்சி1)
தமிழகத்தைப் பொருத்தவரை, இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்
காஞ்சி2 என்ற நூலிலும் சமணர்கள் இறைவழிபாடு செய்ததாகக் குறிப்புகள்
இருக்கின்றன.
வழிபாடு
வழி + படு என்பது வழிபாடு ஆகிற்று. வழிபடுதல் என்றால் நாம்
தொழத்தக்கவர்கள் யாரோ, அவர்களை வழிபடுவது. அவர்கள் சென்ற
வழியே அல்லது காட்டிய வழியை நாம் பயனிப்பது என்பது அதன்
நுண்ணியக் கருத்து. சமண வழிபாட்டின் நோக்கமும் அதுவே.
பாத வழிபாடு
பாத வழிபாட்டிலிருந்தே உருவ வழிபாடு தோன்றியது. இந்திய வரலாறு
நமக்குக் காட்டுவதும் அதுவே! சமணம் முழுமுதற் இறைவன் ஒருவனால் படைக்கப்பட்டதல்ல. சமணமும், பெளத்தமும், மனிதனால் உருவாக்கப்பட்ட
சமயங்கள். சமணம் போற்றும் தீர்த்தங்கரர்கள், நம்மை போன்று தாயின்
வயிற்றில் பிறந்து, பின் ஆன்மீயப் பயனத்தில், படி படியாக தங்கள் ஆள்வினை முயற்சிகளினால் இறைநிலை அடைந்தவர்கள். அவர்கள் தேசந்தோறும் திரிந்து
மக்களுக்கு அறிவுரைப் பகர்ந்து, தாங்கள் சென்ற மார்க்கத்தை/வழியை
மற்றவர்களும் உபதேசித்து அருளினார்கள். இதனால் இறைவன் என்ற பதம்
அல்லது சொல் தலைவன் என்றும் முனிவன்3 என்றும் சமணத்தில்
கொள்ளப்படுகிறது. அவர்களின் நினைவாக, மனிதர்களால் செய்து
வழிபட்டதுதான் பாதுகைச்/பாதச் சிற்பங்கள். இவ்வகையான பாத சிற்பங்கள்
இந்திய நாட்டின் முழுமையும் காணலாம்.
வழிபாட்டின் நோக்கமே, பெரியவர்கள்/தலைவர்கள்/சான்றோர்கள் சென்ற பாதையை/வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே! அஃதாவது,
அவர்கள் வழங்கிய/அருளிய அறக்கோட்பாடுகளை நாமும் பின்பற்ற வேண்டும்
என்பதின் குறியீடே இவ்வழிபாடு.
சாமாயிகம்4 அல்லது அறசிந்தனை
சமண இல்லறத்தார்கள் நாள்தோறும் குறைந்தது ஒரு வேளையாவது
அருக வழிபாடு செய்யவேண்டும். அருகரின் உருவ சிலையை மனதில்
நிறுத்தி, அவர் உபதேசித்தருளிய அறகோட்பாடுகளை நினைத்து அற வழிப்படல்
வேண்டும் என்பதுதான் சமணர்கள் கூறும் இறைவழிபாட்டின் நோக்கம்.
கதை கேளு
(எம் பெரியவர் திருவாளர்.வி.சி.ஸ்ரீபால் அவர்களின் கதையை இங்கு
எடுத்துக்காட்டி இருக்கிறேன். அன்னாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்)
சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கு
நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம்
பார்ப்போம்.
ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்;
புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும்
அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும்
பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?
அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார்.
அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப
பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின்
வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால்,
இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்!
எப்படி?!!
முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும்,
அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். 😉
ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்
கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.
முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு!
பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு!
நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை
வித்தியாசங்கள்!!
சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது
அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இத்தை” வியாபாரம் என்று சொல்லாமல்
வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!
குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற
பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு
நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று
நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல்
செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்5”.
வேண்டுதல் வேண்டாமை இலான்
இங்கு அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்? எழவேண்டுமே!! 😉
குறளாசிரியர் குறள்,
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனான இறைவனை வணங்கினால் எந்த
துன்பமும் வராது என்று சொல்கிறாரே என்று கேட்டீர்களானால், பதில் அதிலேயேயிருக்கிறது.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கொண்டவன் இறைவன் என்று
கூறும் குறளாசிரியர், அவரை வணங்கினால் நம்முடையத் துன்பங்களை
இல்லாமல் செய்துவிடுவார் என்று முரணாக எழுதுவாரா? சிந்தனை செய்
மனமே!
அக்குறளுக்கு அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது!
அக்குறளுக்கு பொருள்தான் என்ன?
வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது
அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை
அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.
குறளின் விசேஷமே அதுதான். குறளறம் எல்லா தரப்பு மக்களுக்கும்
கூறப்பட்டது. மக்கள் எல்லா நிலைகளிலும் இருப்பர். அவரவர் நிலைகளில்
(ஆன்மிகப் பயணத்தில்) புரியும் வண்ணம் குறளறம் கூறப்பட்டிருக்கிறது.
விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் குறளறம் பயன்படவேண்டுமல்லவா!
இன்னும் சந்தேகம் தெளியாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு
காட்டுக் கொடுத்தமைவோம்.
நிலமிசை நீடுவாழ்வர்
திருக்குறளின் 3ஆவது பாட்டு,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
மலர்மேல் நடந்தவனது அடிகளை சேர்ந்தவர்கள் நிலத்தின்/பூமியின் கண் நீடு
வாழ்வார்கள் என்று பொருள் எடுத்துக் கொண்டால்; பிறந்தவர்கள் இறப்பது
நிச்சயம் தானே. அது தானே உலக நடப்பு. அப்படியிருக்குபோது குறளாசிரியர்
நிலத்தின் கண் நீடு வாழலாம் என்கிறாரே. அவருக்கு உலக நடப்பு தெரியாமல் எழுதிவிட்டாரா? அவ்வாறுக் கூறுதல் கூடாது.
விளிம்பு நிலை மாந்தர்கள் அவ்வாறு பொருள் கொள்ளலாம். ஆனால்,
விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் அவ்வாறு பொருள் கொள்ள
மாட்டார்கள்.
பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டும் என்ற வகையில் பார்த்தால், இங்கே
நிலமிசை நீடுவாழ்வார் என்பது மலர்மேல் நடந்தவனை வழிபட்டால் அல்லது
அவர் அருளிய அறவழிபடி நடந்தால், சம்சார சுழற்சியில் இருந்து விடுபட்டு,
நிலம்-பூமியின் உச்சியில் (வீடுபேறடைந்த உயிர்கள் தங்கும் இடம்) நீடு
வாழலாம் என்பதுதான் அக்குறளின் நுண்ணியப் பொருள்! என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை