Three Jewels
மும்மணிகள் – மூன்று மணிகள். என்ன விஷேசம் அந்த மணிகளில்? அது
என்ன அவ்வளவு விலை மதிப்பில்லாததோ? அதை நாம் சூடமுடியுமா?
போன்ற கேள்விகளுக்கு விடைக் காண மேலே படியுங்கள்.
சமணத் தத்துவத்தையும் அதன் சாராம்சத்தையும் பிழிந்து ஒரு கிண்ணத்தில்
வைத்தால் அதுதான் மும்மணிகள்! மும்மணிகளை விளங்கிக் கொண்டாலே
சமணத் தத்துவத்தை விளங்கிக் கொண்ட மாதிரி தான். சமணத்தின் ஆணிவேர்
இந்த மும்மணிகள். மும்மணியை மிக சுருக்கமாகக் கொடுக்க முயன்றிருக்கிறேன்.
அதே நேரத்தில் அதன் அதன் உள்பொருள் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் “in a Nut shell” என்பார்களே, அதுபோல இந்த மும்மணிகள்
சமணத் தத்துவத்தின் குறிக்கோளை அறிந்துக் கொள்ளக் காட்டப் பயன்படும்
குறியீடு எனலாம்.
இரத்தினத் திரயம் – மும்மணிகள்
1. நற்காட்சி* – சம்யக் தரிசனம்
2. நல்லறிவு – சம்யக் ஞானம்
3. நல்லொழுக்கம் – சம்யக் சாரித்திரம்
இந்த மூன்று மணிகளை அறிய கீழே இரண்டு பாடல்களைக் கொடுக்கிறேன்.
புரிகிறதா என்று பாருங்கள்!!
ஐஞ்சிறுக்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில்,
”மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
அப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
இப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபெற் றாரோய்”
– சூளாமணி – பாடல் 201
ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில்,
”உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்
தெள்ளிதன் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதிற் றரித்தலை ஒழுக்கம் என்பவே”
– சீவக சிந்தாமணி – பாடல் 2845
என்ன புரிந்ததா? என்னதான் நச்சினார்க்கினியர் உரையும், பெருமழைப் புலவர்
உரையும் வைத்துக் கொண்டுப் படித்தாலும் மும்மணிகளை, அதன் வீச்சை
உள்வாங்கிக் கொள்ள சற்று சரமம்தான். இதன் கருத்தை சுருக்கமாக,
அதேசமயம் அதன் பொருள் மாறாமல் புரிந்துக் கொள்ள அல்லது விளக்க
என்ன வழி என்று பலதடவை நினைத்து, நினைத்து வழித் தெரியாமல்
நின்றிருக்கிறேன். ஆனால் ஒரு எளிதான வழியிருந்திருக்கிறது என் கண்
முன்னாலேயே? ஆனால் என்னால் தான் அவற்றைப் “பார்க்க” முடியவில்லை.
தேவர் உரைப்பத் தெளிந்தேன்!
நினைத்தவர்க்கு கொடுப்பதுக் கற்பக விருட்ஷம். நினைக்காதவர்களுக்கும்
கொடுப்பது நம்ம திருக்குறள். எனக்கு கைக் கொடுத்த அப்பாட்டு, கல்வி
என்ற அதிகாரத்தில்,
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
– திருக்குறள் – பாடல் 391
இக்குறளுக்கு விளக்கம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இக்குறள்
மும்மணியின் சாரம். எவ்வாறு என்றுப் பார்ப்போம்!!
நற்காட்சி – கற்க – எவற்றை கற்க வேண்டும் என்று ஆராய்ந்துப் பார்த்தல்.
நல்லறிவு – கசடறக் கற்பவை – அவ்வாறு ஆராய்ந்துப் பார்த்தை ஐயமின்றிக்
கற்றுத் தெளியவேண்டும்.
நல்லொழுக்கம் – நிற்க அதற்குத் தக – தெளிந்தப் பின் அவ்வாறு ஒழுகவேண்டும்.
இதுதாங்க மும்மணிகள்!! 🙂
இரா.பானுகுமார்,
சென்னை