இல்லற இயலும் சமணமும்

 

சமண அவதூறுகள் 2

இல்லற இயலும் சமணமும்!


சமணம் இல்லறத்தை வெறுத்தது! – அவதூறு 2

சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். சமணத்தை முடக்கவும், பாமர மக்களை மயங்க வைக்கவும் சமணத்தை எதிர்த்தவர்கள் எடுத்துக் கொண்ட முக்கிய ஆயுதம் இதுவென்றால் அது மிகையல்ல. சமணம் இல்லறத்தை வெறுத்தது, சமணத்திற்கும் இல்லறத்திற்கும் வெகு தூரம் என்று சொல்லி சொல்லியே ஆட்சியை பிடித்த சமயங்கள் பல உண்டு. 😉

சமணம் இல்லறத்தை வெறுத்ததா?

உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!

“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதுப்பற்றி மேலும் அறிய என்னுடைய தொல்காப்பியர் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.

இவ்வாறு ஆதிபகவன் இரு அறங்களையும் அருளியதோடு அல்லாமல் அவ்வாறு நடந்துக் காட்டினார். இல்லறத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய பின் துறவறத்தை மேற்கொண்டார் என்றும் கீழே வரும் பாடல் குறிக்கிறது.

“மன்னுயிர் காத்தலான் மனம்விட்டு அருளினொடு
இன்னுயிர் உய்கஎன இல்லறமும் இயற்றினையே
புன்மைசால் அற நீக்கிப் புலவர்கள் தொழுது ஏத்தக்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே”
– யாப். விருத்தி (சூ. 84)

“ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே!” – தோத்திரத் திரட்டு.

மேற்கூறியப் பாடல் மூலம் ஒன்று புலப்படுகிறது. உலகிற்கு முதன் முதலாய் இல்லறம், துறவறம் என்று வகுத்துக் கொடுத்தது அருக கடவுளான “ஆதிபகவன்” என்று அழைக்கப்படும் “ஆதிநாத”ரே என்பதும் பெறப்படுகிறது.

இரண்டு அறங்களும் ஒன்றே!

“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” – நரிவிருத்தம் (35)

வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் பெற்று, அதை பலரும் பயன்பெற பகுத்துத்தந்து கூடி வாழும் இல்லறமும், முற்றுந்துறந்து, தவநிலை தவறாமல் நிற்கும் துறவறமும் ஒன்றுதான் என்று மேலே கூறியப் பாடல் சொல்கிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம். “சீவகசிந்தாமணி” என்னும் ஒப்பற்ற காவியம் பாடிய “திருத்தக்கதேவர்“ அவர்கள் அருளிய “நரிவிருத்த’த்தில் தான் மேலே கூறியப் பாடல் வருகிறது.

அம்மட்டோ,

“வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் – புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
சொலெதிர் சொல்லாள் எனில்” – அறநெறிச்சாரம் (157)

இல்லறத்தின் தர்மத்தைக் காத்து, வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தினரை நோக்கி காத்திருக்கும் இல்லறத்தானின் இல்வாழ்க்கை உயர்த் தவத்தினை விட சிறந்தது என்று மேலே கூறப்பட்டப் பாடல் கூறுகிறது.

எங்கே மனதைத் தொட்டு சொல்லுங்கள், மேலே கூறியப் பாடலகளில் திருக்குறளின் சாயல் தெரியவில்லை?. திருக்குறளின் 47 & 48 ஆவது குறட்பாக்களை இங்கே நினைத்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

மேலே கூறியப் பாடல்களின் மூலம் பகுத்துண்டு பல்லூயிர் ஓம்பும் இல்லறமும், ஒழுக்கம் மாறா தவநிலைத் துறவறமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது.

கட்டுரையை முடிக்கும் முன் கீழே வருவனவற்றை கொஞ்சம் படித்து வையுங்கள். 🙂

சமணமும் தமிழும் (பக்கம் 28)

“தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர்கள், சமணர்கள் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.

“நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்கிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப் போன்றுதான் உடை உடுத்தி இருப்பார்கள்” என்று கூறியபோது அந்த நண்பர், ‘அப்படியா” என்று அதியப்பட்டார்” என்று மயிலையார் எழுதியிருக்கிறார்.

முடிபு

இப்படித்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சமணப் பற்றியப் புரிதல்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, திருக்குறளில் காமத்துப்பால் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால், திருக்குறள் சமண நூலாக இருக்க முடியாது என்பார்கள். அவர்கள் காமரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட “சீவக சிந்தாமணி” யை மறந்துவிட்டார்கள் போலும்; திருத்தக்க தேவர் என்னும் சமண பெரியார் அன்றோ அந்நூலை வடித்தது? தங்கள் வசதிக்காக மறந்துவிடுகிறார்கள்! 🙂

யான், இணைய அன்பர்களுக்கும், மற்ற சகோதர நண்பர்களுக்கும் கூறுவது யாதெனின்? சமணத்தை நேரடியாகப் படியுங்கள். சமணத்தைப் பற்றிய அறிய நிறைய தமிழ் நூற்கள் உண்டு. குறிப்பாக, இல்லற தர்மத்தை அறிய, அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு போன்ற நூற்கள் உதவும்.

அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை!!

இரா.பானுகுமார்,
சென்னை 61

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*