Home வட்டாரம்ஈரோடு அறச்சலூர் இசைக்கல்வெட்டு

அறச்சலூர் இசைக்கல்வெட்டு

by admin
0 comment
வணக்கம்.
 
 
அறச்சலூர் இசைக்கல்வெட்டு  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தனியிடம் பெறும் ஒன்று.
 
கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்கள் செதுக்கப்பட்டவை.
 
அறச்சலூர் என்னும் ஊர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு  பாறைகள் நிறைந்திருக்கின்றன.  பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்ததற்கான சான்றாக காணப்படும் சற்றே சிதைந்த நிலையிலான கற்படுக்கைகளையும் இந்த குகைப்பகுதிக்கு முன்னே உள்ள பாறையில் காண முடிகின்றது.
 
இந்தப் பாறைப்பகுதியின் மேல் அமைந்திருக்கும் குகைப்பகுதியில் தான் பண்டைய தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன.
 
ஈரோடு கல்வெட்டுத்துறை அறிஞர்  எஸ்.ராசு அவர்களால் 1960ல் இந்தக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
இந்தக் கல்வெட்டு அமைந்திருக்கும் குகைப்பாறையில் முதலில் நமக்குத் தென்படுவது இசைக்கல்வெட்டு. ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும் ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை கீழ்க்கணும் வகையில் குறிப்பிடுகின்றார்.
 
த  தை  தா  தை   த
தை  தா  தே  தா  தை
தா  தே  தை  தே  தா
தை  தா  தே  தா  தை
த  தை  தா  தை   த
 
இந்த இசைக்கல்வெட்டுக்கு அருகில் மேலும் இரண்டு வரிகளிலான தமிழி கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. இதனை வாசித்தளித்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதன் வடிவத்தை
 
எழுதும் புணருத்தான் மசிய் 
வண்ணக்கன் தேவன் ஙாத்தன் 
 
எனக் குறிப்பிடுகின்றார்.
 
அதாவது, மசி என்னும் ஊரைச் சேர்ந்த காசு பரிசோதகரான தேவன் ஙாத்தன்  இங்கு எழுதப்பட வேண்டிய இசை எழுத்துக்களையும்  தொகுத்தளித்தார் எனக்குறிப்பிடுகின்றார்.
 
இதே கல்வெட்டை ஆராயும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை
 
எழுத்தும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்
 
எனக் குறிப்பிடுகின்றார். இவரது விளக்கப்படி, மணிவண்ணக்கனான தேவன் சாத்தன்  இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். இசை எழுத்துகள் பற்றி  அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில்  “பாலை” என்னும்  படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார்.  அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என்று திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.
 
இந்த இரு கல்வெட்டுக்களும் அருகிலேயே கீறப்பட்ட ஓவியம் ஒன்றும்  உள்ளது.  இது இரண்டு நபர்கள் நிற்பது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வடிவம் ஆராயப்படவேண்டிய ஒன்றே.
 
தமிழ் கல்வெட்டு வட்டெழுத்தாக உருமாற்றம் பெருவதை உணர்த்தும் வகையில் அமைகின்ற கல்வெட்டுச் சான்றாகவும் இந்தக் கல்வெட்டுத் தொகுதி அமைகின்றது என்பதை இதனை முதலில் கண்டுபிடித்த பேரா.எஸ்.இராசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.
 
இந்த இசைக்கல்வெட்டும் அதனை செய்வித்தவரைப்பற்றியுமான  விளக்கக் குறிப்பு கல்வெட்டும் அடங்கிய இப்பகுதி இன்று பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதி என்பதில் சிறிதும் அய்யமில்லை. ஆயினும் தற்சமயம் இந்த கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி பாதுகாப்பற்ற வகையிலே இருக்கின்றது. நாங்கள் நேரில் இக்கல்வெட்டைத்தேடிச் சென்ற போது தமிழகத் தொல்லியல் துறையின் அடையாளக் குறிப்பு அறிவிப்புப் பலகைகளோ எவ்விதக் குறிப்புக்களோ இங்கு இல்லாதததைக் கண்டு மிகவும் மனம் வருந்தினோம்.  அதுமட்டுமன்றி செல்லும் வழியும் சரியாகப் புலப்படவில்லை. கல்வெட்டு இருக்கும் பகுதிக்கு அருகில் குப்பைகள் நிறைந்தும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே கிடப்பதையும் காணும் நிலை ஏற்பட்டது.
 
தமிழ் நிலப்பகுதியில் நாம் காணும் பண்டைய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழர் வரலாற்றின் தொண்மையை  ஆராய உதவுபவை . அவற்றை முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக முக்கியக் கடமை.  இப்பகுதி விரைவில் தமிழக தொல்லியல் துறையினால் நல்ல முறையில்  பாதுகாக்கப்பட்டு  இங்கு வந்து பார்த்துச் செல்ல விரும்பும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் தகவல்கள் கிடைக்கும் வகை செய்ய வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.
 
குறிப்புக்கள்
 
 
 
விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/03/blog-post_12.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=AUQgMObNaII&feature=youtu.be
 
 
இந்தத்  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் தோழர் சிவப்பிரகாசத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​
 
 
 

You may also like

Leave a Comment