தொல்காப்பியர்

தொல்காப்பியர்

தமிழில் தோன்றிய இலக்கண நூற்களில் மிக தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாம். எனவே செந்தமிழின் முதல் இலக்கண நூல் இது என்பதில் ஐயமில்லை. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் என்பார். இவர் காலத்தை நிச்சயித்து கூற இயலவில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி, இவரின் கால வரையரை கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை இருக்கலாம்.

அவருடைய சமயம்

இக்கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியரின் சமயம் யாது என்பதை அவரின் நூலின் கண்ணே நேரிதின் ஆராய்ந்து கூறுவதுதான். பல அறிஞர்கள் பலவிதமாக கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும் அவற்றின் வழியே செல்லாமல் என் அறிவிற்கு எட்டியவரை ஆராய முற்பட்டுள்ளேன். இக்கட்டுரையை முடிந்த முடிபாக எண்ணாமல், இதன் கண் கூறப்பட்டுள்ள கருத்துக்களை சீர்த்தூக்கிப் பார்த்து, தக்கவையென்றால் வரவேற்று, முரணெனில் அவைகளைச் சுட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன். அக்கருத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஈண்டு பார்ப்போம்.

சமண சமயம் அல்லது சைன சமயம்

ஒரு நூலின் ஆசிரியர் சமயம் அறிய அந்த நூலில் உள்ள கடவுள் வாழ்த்துத்
துணைப் புரியும். காட்டாக, “பல்கலைக் குரிசில் பவணந்தி” என்று போற்றப்பட்ட நன்னூல் ஆசிரியர் தன் நூலின் எழுத்ததிகார தொடக்கத்தில்,

“ பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே”

என்று தொடங்குகிறார். இப்பாடல் சமண கடவுளான அருகனை வணங்குகிறது. ஆகையால், நன்னூல் ஆசிரியர் சமண மதத்தவர் என்பது பெறப்படும். அவ்வாறே, மற்ற நூலின் கண் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பார்த்து அந்த நூல் எச்சமயம் சார்ந்தது என்பதை எளிதில் உள்ளலாம். இக்கருத்து கடவுள் வாழ்த்துள்ள நூற்களுக்கு பொருந்தும்.

கடவுள் வணக்கம் கூறப்படாத நூற்களுக்கு?

காட்டாக தொல்காப்பிய நூலில் கடவுள் வணக்கம் கூறப்படவில்லை. தமிழுக்கு இலக்கணம் கூற வந்த நூலாசிரியர் கடவுள் வணக்கம் கூறாமற்விட்டார் போலும். (கூறாமல் விட்டாரா? அல்லது பின்னாளில் அழிக்கப்பட்டதா?)

ஒரு நூலில் கடவுள் அல்லது இறை வணக்கம் கூறாமல் விட்டிருந்தால் அந்நூலின் கண் அமைந்த முதன்மைக் கருத்துக்களைக் கொண்டோ, சிறப்புப் பாயிரம் மூலமோ, உரையாசிரியரின் உரை மூலமாகவோ ஒருவாறு அந்நூலின் ஆசிரியர் சமயத்தை நிறுவலாம். இம்முறை சரியானது என்று கூறமுடியாது. பல முரணானக் கருத்துக்கள் அமையக்கூடும். ஆனாலும் வேறு வழியில்லையாதலால், யானும் அம்முறையே மேற்கொள்கிறேன்.

சிறப்புப் பாயிரம்

“வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே”

இப்பாயிரத்தில் ஆசிரியரின் சமயம் பற்றி அறிய “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரும், “பல்புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரும் வகை செய்கிறது.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பதில் “ஐந்திரம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது? அதன் பொருள் என்ன?

ஐந்திரம்

ஐந்திரம் பற்றி பலதரப்பட்ட பொருட்கள் கூறப்பட்டாலும், ஐந்திரம் என்பதற்கு தொல்காப்பியத்தின் உள்ள ஆதாரத்தைக் கொண்டு ஆராயப்படவேண்டும். இதை சில அறிஞர்கள் கருத தவறிவிட்டார்கள். அஃதென்ன?

ஐந்திரம் என்பது வடமொழி இலக்கணம் என்றும், அது பாணினியின் இலக்கணத்திற்கும் முந்தயது என்றும் உரைப்பர் சில அறிஞர்கள். இங்கு ஒன்றைக் குறிக்க விரும்புகிறேன். இந்திய வரலாற்றில் எப்படி வைதிகச் சமயங்கள், அவைதிக சமயங்கள் என்று இரண்டு பிரிவு உள்ளனவோ, அப்படி இலக்கிய உலகிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவை இரயில் வண்டியின் தண்டவாளத்தைப் போல. என்றுமே சேராது, ஆனால் அருகருகே பயணிக்கும். அதுப்போல் இலக்கணத்திலுமாம். ஐந்திரக் கோட்பாடு என்பது சமணம் சார்ந்தது. பாணினி என்பது வைதிகம் சார்ந்தது. (ஐந்திரத்திற்கும் முன்னாலேயே “சாகடாயணம்” என்ற சமண இலக்கண நூல் இருந்தது என்பது சமணர்தம் நம்பிக்கை).

மேலும், ஐந்திரம் என்பது இந்திரனால்* எழுதப்பட்ட இலக்கணம் என்பது சமணர்களின் நம்பிக்கம்.

(*சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், காடுகாண் காதை, 155, “கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்” என்ற வரியை நோக்குக. )

இந்நம்பிக்கையின்படி ஐந்திரம் என்பது இந்திரனால் எழுதப்பட்ட இலக்கண நூல் என்பதாகிறது. இக்கருத்து எனக்கு உடன்பாடன்று. ஐந்திரம் என்பது இங்கு நூலைக் குறிக்கா. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரில் நிறைந்த என்பது குணத்தைக் குறிக்கவேண்டும் என்பது என் தாழ்மையானக் கருத்து.

எப்படியெனில், ஐந்திரம் என்பது சமண முனிவர்களுக்குரிய உறுதிப்பாடுகளான ஊறன்மை, வாய்மை, களவாமை, மணவாமை, தவம் என்ற ஐந்து சால்புகளைக் குறிக்கும். இந்த ஐந்து பண்புகளால் நிறைந்த தொல்காப்பியன் என்பதைத்தான் அந்த சிறப்புப் பாயிரம் குறிக்கிறது என்பது என் கருத்து.

பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் ஐந்திரம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும் என்பார். உலகாய்தத்தோடு தொடர்புப்படுத்துவார். இதுவும் பொருந்தா. பஞ்ச பூதங்களை உலகாய்த சமயம் மட்டும் போற்றுவதில்லை. பஞ்ச பூதங்களை, பஞ்சஸ்த்திகாயம் என்று சமணமும் போற்றும். ஆதலால், ஐந்திரம் என்பது உலகாய்தத்துக்கும், பூதவியலுக்கும் மட்டும் சொந்தமில்லை என்பதாகிறது.

படிமையோன்

பல் புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரில் படிமையோன்என்பதை சிறிது விளக்குவோம்.

படிமையோன் என்பதை தொல்காப்பியத்தின் முதம் உரையாசிரியரான “இளம்பூரணார்” என்ற சமண ஆச்சாரியர் “தவ ஒழுக்கத்தினை உடையோன்” என்று பொருள் கொள்கிறார். இது சமண முனிவர்களின் தவவொழுக்கத்தை கூறும் சமண சொல்லாட்சி. இது சமண சார்புடைத்து. “பிரதிமயோகம்” என்று
அவை சுட்டும். அத்தவத்தை மேற்கொள்ளும் முனிவர்களுக்கு “பிரதான யோகதாரி” என்றும் சுட்டும். தவவொழுக்கத்தில் முற்றியவர்கள் மேற்கொள்ளும் ஒருவகை தவம் அது. அதனால் பல்புகழ் என்பது அத்தவத்தையே குறிக்குமாம்.

நூல் அகச்சான்று 1

தொல்காப்பியர் முதல் நூல் பற்றிச் சொல்ல வரும்போது இவ்வாறு கூறுகிறார்.

“ வினையின் நீங்கி1 விளங்கிய அறிவின்2
முனைவன்3 கண்டது முதல்4நூ லாகும்

என்றுக் குறிக்கிறார். இத்தொடர்ப் பற்றி பல சமய அறிஞர்கள் பலவாறு எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக சைவர்கள் இத்தொடர் சிவபிரானைக் குறிக்கிறது என்கிறார்கள். இது பொருந்தாது. எவ்வாறெனில், அதை விளக்குவோம்.

வினையின் நீங்கி1 = வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்ட, அஃதாவது, வினைக்கட்டுகளால் சில காலம் உட்பட்டு, பின் அதனில் இருந்து விடுபட்டு,

விளங்கிய அறிவின்2 = அவ்வாறு வினைகளில் இருந்து விடுபட்டதினால் எழுந்த/தோன்றிய ஞானத்தின் (அறிவின்),

முனைவன்3 = முனிவன், ஆசிரியன், முதல்வன்,

கண்டது முதல் நூலாகும்4 = அந்த முனிவனால் எழுதுவிக்கப்பட்டது அல்லது செய்விக்கப்பட்டது முதல் நூலாகும்.

தொகுப்பாக, வினைக்கட்டுகளிலிருந்து விடுப்பட்டதினால் எழுந்த ஞானத்தைக் கொண்டு முதல்வன் எழுதியது முதல் நூல் என்பது மேலே கூறியத் தொடரின் கருத்து.

இக்கருத்து சிவபெருமானுக்கு பொருந்தா. சிவபெருமான் “பிறவா யாக்கை பெரியோன்”. அதனால் வினையின் நீங்க வேண்டா. அதனால் வினையின் நீங்கி விளங்கும் ஞானமும் வேண்டா. மேலும் அவர் நூல் இயற்றினார் என்று சத்தியப் பிரமாணம் இல்லை.

முடிபாக, இத்தொடர் அருகக் கடவுளைக் குறிக்கிறது. எங்ஙனமெனில்?

சமணத்தின் முதல் கடவுளாகப் போற்றப் பெறுபவர் “ஆதிபகவன்” என்றழைக்கப்படும் ரிஷப தேவராவார். இவரே இப்பரதக் கண்டத்தின் முதல் பேரரசரும் ஆவார். இவரே இந்த உலகியல்பை தோற்றுவித்தார். ஆறு தொழில்களைக் கற்பித்தவர். இல்லறம், துறவறம் என்ற பிரித்து மக்களுக்கு அறம் உரைத்தவர். இவரே எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். இவரே முதல் துறவரசரும் ஆவார்.

இல்லறத்தை நடாத்திக் காட்டி, பின் துறவேற்று, வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்டு வாலறிவு என்னும் கேவல ஞானத்தைப் பெற்றார். கோட்டம் என்று அழைக்கப்படும் ‘சமவசரண”த்தில் அறம் பகர்ந்தார். இவர் அறம் “திவ்விய தொனி”யாக வெளிப்பட்டு, கணதரர்கள் வாயிலாக ஆச்சாரியர்களால் வெளியிடப்பட்டது ஆகமங்களாகும். இவர் முதன் முதல் இலக்கண நூலைச் செய்தருளினார் என்று ஸ்ரீபுராணம் சுட்டும். இதனால், மேலே சொன்ன தொடர் அருகக் கடவுளைக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிக்கனி.

நூல் அகச்சான்று 2

தொல்காப்பியர், மரபியல் 27-33 ஆம் சூத்திரத்தில் உயிர்களை வகைப்படுத்துகிறார். அச்சூத்திரம் கீழ்வருமாறு.

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”.

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கு அறிவின
வேபிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே”.

இவ்வகுப்புச் சமணச் சார்புடையது. நீலகேசிமேருமந்திரப் புராணம்ஆகிய நூட்களில் இவ்வாறான பகுப்பை நோக்குக.

உயிர்களின் இப்பகுப்பு முறை வைதிக இலக்கியங்களில் கிடையாது. இஃதொன்றே சாலும் தொல்காப்பியர் சமணர் என்று.

நூல் அகச்சான்று 3

தொல்காப்பிய நூன் மரபு 7ஆம் சூத்திரத்தில் இவ்வாறு குறிக்கிறார்.

“கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே”

இவ்வாறு மாத்திரை அளவுகளாக கைநொடித்தலும், கண்இமைத்தலையும் குறிப்பது சமண சமயக் கோட்பாடு. காட்டாக, பட்டாகளங்கர் என்னும் சமணர் தம் “சுப்தானு சுசுநந்தம்” என்னும் கன்னட இலக்கண நூலில் மாத்திரை அளவுகளாக கைநொடித்தலையும், கண்ணிமைத்தலையும் குறித்திருக்கிறார். அதற்கு தம் நூலில் ஒரு பிராகிருத நூலில் இருந்து ஒரு மேற்கோளும் காட்டுகிறார். (வையாபுரியார்). சமணர்கள் தம் நூலிற் கோட்பாடுகளை மேற்கோள்களாகக் காட்டுமிடத்து தம் சமய நூலில் இருந்துதான் சான்று தருவார்கள் என்பதால் இக்கருத்தும் சமணமாம்.

நூல் அகச்சான்று 4

தொல்காப்பியத்தில் வரும் “னகர இறுவாய்”, “பாட்டிடைக் கலந்த பொருள ஆகி பாட்டின் இயல பண்ணத்திய்யே”, “கந்தழி”, “ஊழ்வினைக் கொள்கை”, “காலம் உலகம் உயிரும் உடம்பே”, நிலையாமை கொள்கை” போன்றவற்றைப்
பார்க்கும்போது இவர் நிச்சயம் சமண மதத்தவர் என்பது தெரிகிறது.

1. “னகர இறுவாய்” = ஆண்பாலைத் தொக்கி நின்றது என்பார் இளம்பூரணார். சமணத்தில் (திகம்பர சமணம்) பெண்பாலுக்கு வீடுபேறில்லையாதலால்.

2. “பாட்டிடைக் …. பண்ணத்திய்யே” = பண்ணத்தி என்பது ஒரு வகை செய்யுள். சமணர்கள் இதை அதிகம் கையாண்டிருக்கிறார்கள். மற்ற வைதிகச் சமயத்தார் எடுத்தாண்டதாக தெரியவில்லை.

3. “கந்தழி” = “நிர்கந்தர்” என்பதன் நேரிடையான தமிழ் மொழிப்பெயர்ப்பு.

சமணரே

மேற் சொன்னக் கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தொல்காப்பியம் செய்த தொல்காப்பியனார் சமணர்(ஜைனர்) என்பதுப் புலப்படும்.

இரா.பானுகுமார்,
சென்னை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*