தமிழகத்தில் சமணச் சான்றுகள் பரவலாகக் காணக்கிடைக்கும் இடங்களில் கொங்கு மண்டலமும் ஒன்று. இப்பகுதியில் அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. இன்று இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடத்தில் முதலில் சிறிய பாறைக்குன்றின் மேல் செதுக்கப்பட்ட சிற்பங்களைத் தான் மக்கள் முருகன் வள்ளி தெய்வானையுடன் நிற்பதாக உருவகப்படுத்தி வழிபடத்தொடங்கியிருக்கின்றனர். பின்னர் புதிதாக ஒரு சிறிய முருகன் கோயிலையும் அமைத்துள்ளனர்.
இப்பகுதியை நாம் ஆராய்ந்த போது இச்சிற்பங்கள் சமண நூலான ஸ்ரீபுராணம் குறிப்பிடும் ஆதிநாதரின் மகள்களும், பாகுபலியின் சகோதரிகளுமான பிராமி, சுந்தரியே சிற்பங்கள் காட்டும் இரு பெண்களும் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஆதிநாதர் தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது. ந
இக்குன்றிற்கு சற்று தூரத்தில் பாறையின் மேல் வட்டெழுத்துத் தமிழில் சொற்கள் காணப்படுகின்றன. இதன் முழுமையான தொகுதி சிதைவுண்டிருக்கலாம். இக்கல்வெட்டின் காலம் அதன் தன்மையை கருத்தில் கொண்டு ஏறக்குறைய கி.பி 8லிருந்து 10 வரை எனக் கூறலாம்.
ஆய்வாளர் திரு.துரைசுந்தரம் இச்சின்னங்களைப் பற்றி விளக்குவதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/04/2018.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=kD1wX4ehuR0&feature=youtu.beblogspot.de/2018/04/2018.html
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]