Home வட்டாரம்மதுரை சமணமலை – மதுரை

சமணமலை – மதுரை

by admin
1 comment
 
மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
 
இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி
 
என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.
 
இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
 
இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
 
முதல்கல்வெட்டில்
 
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி
 
 
அடுத்த கல்வெட்டில்
 
1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி
 
என்றும்
 
மூன்றாம் கல்வெட்டில்
 
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி
 
என்றும் வழங்கப்பட்டுள்ளன.
 
இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.
 
நன்றி: மாமதுரை – பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.
 
 
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.be
 
 
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​
 

You may also like

1 comment

க.இராமச்சந்திரன் October 16, 2017 - 9:38 AM

அப்படி என்றால். ……இது வணிகவழியாக இருக்ககூடும்….மதுரை -பளியன்குடி-மங்கலதேவி கோயில்வழியாக-தேக்கடி- சேரர் தலைநகர் வஞ்சி(திரு வஞ்சை க்களம்)..
பாண்டியர் வைகை பெருவழி (அழகன்துகுளம்)முதல் கொச்சி- எர்ணாகுளம் வரையிலானது. ……

Reply

Leave a Comment