வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்
தமிழகச் சிற்பிகளும் கல்வெட்டுக் கலைஞர்களும் தமிழ் மண்ணில் விட்டுச் சென்றிருக்கும் சான்றுகள் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்பவை. கி.மு 6 என்ற கால நிலையிலேயே கல்வெட்டு பொறிக்கும் திறன் பெற்றோராகத் தமிழர் தொழிற்கலை அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாக அமைவது என்பதோடு இக்காலத்திற்கு முன்பே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேச்சு, வடிவம், இலக்கணம் என்ற வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மிக நல்ல சான்றாகவும் அமைகின்றது.
கி.மு.5ம் நூற்றாண்டு வாக்கில் மதுரை நகரைச் சுற்றியுள்ள குன்றுகளில் பல சமண முனிவர்கள் தங்கியிருந்தமைக்கானச் சான்றுகளை இன்றும் பாறைகளில் உள்ள படுக்கைகள், தொல் தமிழ் எழுத்துக்கள் என்பனவற்றிலிருந்து அறியமுடிகின்றது. இம்முனிவர்களை அச்சயமம் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆதரித்து, இவர்கள் தங்கவும் பள்ளிகள் அமைத்து கல்விச்சேவை புரியவும் உதவி இருக்கின்றனர். பொருள் வளம் மிக்க வணிகப்பெருமக்களும் சமண முனிவர்கள் குன்றுகளின் பாறைப்பகுதிகளில் தங்கியிருக்க வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய செய்திகளை இப்பாறைகளில் வடிக்கப்பட்டுள்ள தொல் தமிழ் எழுத்துக்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
மாங்குளம், மதுரையிலிருந்து ஏறக்குறைய 20கிமீ.தூரத்தில் இருக்கும் ஊர். ரோவர்ட் சீவல் என்பவர் தாம் 1882ம் ஆண்டில் இங்கிருக்கும் மாங்குளம் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர் என்ற சிறப்பினைப் பெறுபவர். கல்லில் பொறித்த எழுத்துக்களைப் பார்த்து இவை என்ன குறியீடுகளோ என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆயினும் இவை என்ன எழுத்துக்கள் என்பது கடந்த நூற்றாண்டில் தான் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய சமண நெறி சார்ந்த கல்வெட்டுக்களிலேயே இந்த மாங்குளம் கல்வெட்டுக்கள் தாம் மிகப்பழமையானவை என்ற சிறப்பைப் பெறுபவை.
இம்மலையில் ஐந்து குகைப்பகுதிகள் உள்ளன. சற்றே தூரத்தில் இடைவெளி விட்டு இவை அமைந்திருக்கின்றன. கற்படுக்கைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வடிய உருவாக்கப்படும் காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே அல்லது அருகாமையில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.
நெடுஞ்செழியன் என்ற சங்ககால பாண்டிய மன்னனின் பெயர் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருமுறை குறிப்பிடப்படுகின்றன. அதோடு செழியன், வழுதி என்ற பாண்டிய குடிப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இங்குள்ள கல்வெட்டுக்கள்:
1.
கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ
நெடுஞ்செழியன் பண அன் கடல் அன் வழுத்திப்
கொட்டு பித்தஅ பளிஇய்
2.
கணிய் நத்திய் கொடிய் அவன்
3.
கணிய் நந்தஸிரிய் குஅன்தமம் ஈதா நெடுஞ்செழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய்
4.
கணி இ நதஸிரிய்குவ(ன்) வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்
5.
சந்தரிதன் கொடுபிதோன்
6.
வெள்அறை நிகமதோர் கொடி ஓர்
(குறிப்பு: பாண்டிய நாட்டு வரலாற்று மைய வெளியீடான மாமதுரை (ஆசிரியர்கள்- பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்) என்ற நூலில் உள்ள குறிப்பு மேலே வழங்கப்பட்டுள்ளன.)
தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத எழுத்தும் கலந்த நிலையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்தின் சிறப்பு எனச் சொல்லப்படும் ழ எழுத்து வெட்டப்பட்ட பழமையான கல்வெட்டு இவைதாம் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.
இப்பகுதியில் 2007ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் செங்கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கூறைகளுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டமை அறியப்பட்டது. கூறைகளுக்கு இடையே மரத்துளைகள் உருவாக்கி அதனை மரச்சட்டங்களை வைத்து இணைத்து இரும்பினால் ஆன ஆணியை கொண்டு இணைத்து இக்கூறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு கிடைத்த வெவேறு அளவிலான பழங்கால ஆணிகள் இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த மாங்குளம் கல்வெட்டுப் பகுதி இன்று தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் சின்னமாக இருக்கின்றது. மேலே பாறைக்குச் செல்லும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கைகள் இருக்கும் பகுதிகளில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பெயர்களை எழுதி,இப்புராதனச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குறிய விடயம்.
அருகாமையில் இருக்கும் குடியானவர்களின் ஆடுகள் இப்பகுதியில் மேய்வதால் ஆட்டுப்புழுக்கைகள் நடைபாதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன.
இப்பகுதியை சுத்தம் செய்து பாதுகாக்கும் முயற்சி மிக அவசியம்.
ஏறக்குறைய 20 நிமிடப் பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் மாங்குளம் கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.
இந்த மாங்குளம் தமிழ் கல்வெட்டுக்கள் பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/02/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=2uH2fyvkLlo&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]