Home வட்டாரம் வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்

வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்

by admin
0 comment
மதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில்  இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை குகைத்தளங்களிலும் கற்படுக்கைகள் இருப்பதைக் காணலாம்.  அத்தகைய ஒரு பகுதி வரிச்சியூரிலும் உள்ளது. இப்பகுதியை  குன்னத்தூர் என்றும் அழைக்கின்றனர்.  
 
மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் வரிச்சியூர் உள்ளது. இங்குள்ள குன்றுப்பகுதி சுப்பிரமணியர் மலை என அழைக்கப்படுகின்றது.  இங்கு வடக்கு நோக்கி அமைந்துள்ள குகைத்தளத்தில் சுமார் 50 சமணத்துறவியர் தங்கும் வகையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருப்பதையும் பாறையின் மேற்பகுதியில் தமிழ் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்., இவை கி.மு 2ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களாகும். இவை சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.  ஒரு சமணப்பள்ளிக்கு நூறு கல நெல்லை தானமாக ஒருவர் கொடுத்த செய்தி இதில் கூறப்படுகிறது. இக்குகை இளநந்தன் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டும் இங்குள்ளது.   பிற்காலத்தைய கல்வெட்டு ஒன்றும் அதாவது விஜயநகர அரசர் காலத்தைய கி.பி 15ம் நூற்றாண்டு கல்வெட்டு  ஒன்றும் இக்குகைப் பாறையில் உள்ளது.  
 
குகைப்பகுதியின் உள்ளே ஒரு குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கின்றது.  பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஒரு சிவலிங்க வடிவத்தில் இறைவன் அமைந்த சிவன் கோயிலும் இருக்கின்றது.  
 
முதல் கல்வெட்டு: ”பளிய் கொடுபி…”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: குகைப்பாறையின் நெற்றி
 
இரண்டாம் கல்வெட்டு: ”அடா…… றை ஈதா வைக ஒன் நூறுகல நெல்…”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு

இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் மேல்.

மூன்றாம் கல்வெட்டு: ”இளநதன் கருஇய நல் முழ உகை”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு

இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் கீழ். 

 
மேலும் கற்படுக்கையின் மீது ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.15ம் நூற்றாண்டாகும். விஜயநகர  பேரரசு காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப்படுகிறது.
 
தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் புராதனச் சின்னமாக இப்பகுதி அமைந்துள்ளது.
 
துணை நூல் : மாமதுரை – பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்
 
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_14.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=yjE78-mf4ds&feature=youtu.be
 
இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment