Home கட்டுரைகள் ஜினவாணி -1

ஜினவாணி -1

by THFiAdmin
0 comment

ஜினவாணி (சரஸ்வதி)

உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி

கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் – கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம்ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.

ஜினசுருதம்

தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.

சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி

திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.

பெண்ணாக உருவகித்தல்

நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

வளரும்….

இரா.பானுகுமார்,
சென்னை 44

image credit : http://www.nationalmuseumindia.gov.in/

You may also like

Leave a Comment