Home வட்டாரம்மதுரை கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வழிபாடும்

கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வழிபாடும்

by admin
0 comment
வணக்கம்.
 
மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர். 
 
Inline image 1
 
நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம்.  பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.  
 
பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.
 
இக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும். 
 
இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன. 
 
முதல் கல்வெட்டின் பாடம்
 
குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)
 
இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.
 
2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்
 
குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்
 
குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.
 
மூன்றாவது கல்வெட்டுப் பாடம்
 
பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்
 
பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.
 
இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
 
இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
 
கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.
 
குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்
 
 
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/10/blog-post_21.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=LV0FnYPrn4k&feature=youtu.be
 
இப்பதிவினைச் செய்ய உதவிய   முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம்  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
 
பதிவுகளில் புகைப்படங்களைக் காண – http://tamilheritagefoundation.blogspot.de/2017/10/2017_21.html
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment