இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.
தமிழ் நிகண்டுகள்
தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.
குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்
கடவுள் வாழ்த்து – நிகண்டுகள் – ஒப்புநோக்கு
எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? 🙂இலக்கியச் சான்றுகள்1.ஆதிபகவன்
“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்
“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை
“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு
2. வாலறிவன்
கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா – (நீலகேசி – 157)
3. மலர்மிசை ஏகினான்
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 – 205)
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி – 187
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி – 188
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி – 189
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை – நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் – 1
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை – (1-5)
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” – திருக்கலம்பகம்
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” – திருக்கலம்பகம் – 74
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு – 6
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு – 11
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை – 1
4. தனக்குவமை இல்லாதான்
(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.
5. அறவாழி அந்தணன்
“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
– திருநூற்றந்தாதி – 27
“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
– சீவக சிந்தாமணி – 1611
“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
– திருக்கலம்பகம் – 25
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)
பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3
உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128
7. இருவினையும் சேரா இறைவன்
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27
8.பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)
ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)
பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563
பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000
9. இறைவன்
கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி – (159)
“கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே”
– சூடாமணி நிகண்டு (1)
குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)
நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1
10. எண்குணத்தான்
பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
– திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
கல்வெட்டுப் பாடல்:
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.
முடிபு:
இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!
இரா.பானுகுமார்,
சென்னை