வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல,
சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக்
கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது
ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன்
காரணமாக ஓம் என்பது இந்து மத அஷரம் (பதம்) என்றே
நினைத்திருந்தேன். திரைப்படங்களில், சடாமுடியுடன் தவசி
ஒருவர், சதா ஓம் என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பது
போல் வந்த காட்சிகளும் அப்படி நினைக்க ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
ஒரு நாள் என் தாத்தாவிடம் விளக்கம் கேட்டதற்கு ஓம்
என்பது பஞ்ச பரமேஷ்டிகளின் ஸ்வரூபம் என்றார். ஆனால்
அதற்கு மேல் அவர் விளக்கங் சொல்லவில்லை. அப்போது,
சிறுவனான எனக்கு புரியாது என்று நினைத்தாரோ என்னவோ!
இன்றைய நிலையில், யாந்தமிழ்ப் பண்டிதனல்லன், ஆகினும்
தமிழ்ப் (பா) படித்தால் புரிகிறது. எனினும், சங்கப் பாடல்கள்
உரையில்லாமல் புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஓம்
என்னும் பதத்தைப் பற்றி (சமணத்தில்) யான் அறிந்ததை
இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். குறையிருப்பின்
தவறாமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!
ஓம் எனும் பிரணவம்
ஓம் என்னும் அசஷரம் ஏறக்குறைய எல்லா இந்திய
சமயங்களிலும் காணலாம். அவைகள் ஓம் என்ற
பதத்திற்கு தத்தம் கருத்தை விளக்கிச் செல்கின்றன.
தற்போது, இந்து சமயம் என்று அறியப்படும் பிரிவுகளில்
ஒன்றான சைவச் சமயத்தில் ஓம் என்ற அஷரத்திற்கு
கீழ்க் காணும் விளக்கம் தரப்படுகிறது.
“ஓம் எனும் பிரணவம் ஓர் எழுத்துப்போல் தோன்றினாலும்
அதில் அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன”1
என்றும்,
”ஆதியில் இறைவனிடத்திலிருந்து தோன்றிய ஒலி நாதமும்,
பிந்துவுமாகும். நாதமும் பிந்துவும் சேர்ந்ததே ஓங்காரமாகும்.”2
என்றும்,
”பிரணவமே எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் கூறியே எல்லா
மந்திரங்களையும் கூறவேண்டுமெனும் நியதி ஏற்பட்டுள்ளது”3
என்று கூறுகிறார் மகாவித்துவான்.கே.ஆறுமுக நாவலர்.
ஓம் என்ற சொல்லாட்சிக்கு, யான் அறிந்தவரை மேல் சொன்ன
விளக்கத்தையொட்டியே அவைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
பெளத்தச் சமயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை
திரு.வினோத் ராஜன் அவர்களிடம் கேட்கவேண்டும். 🙂
ஓம் என்ற சொல்லாட்சி சமணத்திலும் பயின்று வருகிறது.
சமணர்களின் மூல மந்திரம் பஞ்ச மந்திரம். அவற்றின்
சுருக்கமே ”ஓம்”. ஓம் என்றால் பஞ்ச மந்திரத்தை நமஸ்காரம்
செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
பஞ்ச மந்திரம்
நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)4
இது சமணர்களின் முழுமுதற் மூல மந்திரம். பஞ்ச மந்திரம்
எனப்படும். இல்லறத்தாரும், துறவறத்தாரும் ஐந்து வேளையும்
உச்சரிக்கவேண்டிய மந்திரம். இந்த மந்திரத்திற்கு பஞ்ச நமஸ்காரம் 5,
ஓங்காரம் 6, நமோங்காரம் , மொழிப்பொருள் தெய்வம்7,
ஐந்தெழுத்து மந்திரம் 8, திருமந்திரம் 9, பஞ்ச பரமேஷ்டி மந்திரம்10
என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
“பஞ்ச மந்திரம் பாபநாசனம்”11 என்பது சமணர்களின் அசைக்கமுடியாத
நம்பிக்கை. பஞ்ச மந்திரம் உச்சரிப்பால் நல்வினைக் கட்டு ஏற்படும்
என்றும் அறச்சிந்தனை ஏற்படும் என்றும் சமணர்களின் நம்பிக்கை.
இதற்கு சாட்சிப் பகரும் வண்ணம்,
“…வைதிக பிராமணர்கள் தங்களுக்கென்று செய்து வைத்த
சோற்றை ஒரு நாய் உண்ண, ஆத்திரம் அடைந்த அந்த
பிராமணர்கள் அந்நாயைக் கல்லாகும், தடியாலும்
அடிக்கிறார்கள். குற்றூயிருமாய், குலையுயிருமாய்
இருக்கும் அந்த நாயின் காதில் பஞ்ச நமஸ்கார
மந்திரத்தை ஓதுகிறான் சீவக நம்பி. சாகும் தருவாயில்
இந்த நமோங்கார மந்திரத்தைக் கேட்டதினால், அந்த நாயானது
தேவலோகத்தில் தேவனாகப் பிறந்ததாக”12
சொல்கிறது தமிழ்ச் சமண இலக்கியம்.
மேலும் பாட்டிற்கு அருங்கலமாகும் இந்த பஞ்ச மந்திரம்
என்று கீழே வரும் பாட்டு சொல்கிறது.
”பூவுக் கருங்கலம் பொங்குசெந் தாமரை
தேவர்க் கருங்கலம் திங்கள் முக்குடை
பாவுக் கருங்கலம் பஞ்ச மந்திரம்
நாவுக்கு அருங்கலம் நமோஅரஹந் தாணமே13!”
ஓம்
சமணத்தில் ஓம் எனும் அஷரம் பஞ்ச பரமேஷ்டிகளான
அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் மற்றும்
சாதுக்களைக் குறிக்கும். . பஞ்ச மந்திரத்தில் முதல் எழுத்தைக்
கொண்டு அ சி ஆ உ சா என்று சுருக்கமாக ஐந்தெழுத்து
மந்திரமாகப் பயன்படுத்துவார்கள். பஞ்ச நமஸ்காரத்தின்
முழுப் பலனையும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் பெறலாம்.
இவ்வாறு சுருக்கிய ஐந்தெழுத்து மந்திரத்தை மேலும்
சுருக்கி ஓம் என்றும் கூறுவர். அவ்வாறு உச்சரிப்பதால்
முழு மந்திரமும் சொன்ன பலனும் இந்த ஓம் என்னும்
பதத்தை உச்சரிப்பதினால் கிடைக்கும். இதுவே ஓங்காரம்
என்னும் பஞ்ச மந்திரமாம்.
தமிழ் இலக்கியத்திலேயே ஓம் என்பதற்கான விரிவுச் சமண
இலக்கியத்தில்தான் காணமுடிகிறது.
ஓங்காரப் புணர்ச்சி
இனி, பஞ்ச மந்திரத்தில் உள்ள ஐந்தெழுத்துக்கள் எவ்வாறு ஓம்
என்று பரிணமிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
எண் பஞ்ச பரமேஷ்டிகள் முதலெழுத்து எழுத்துப் புணர்ச்சி
1 அருகர் அ –
2 அசரீரி அ அ+அ = ஆ
3 ஆசார்ரியார் ஆ ஆ+ஆ = ஆ
4 உபாத்தியாயர் உ ஆ+உ = ஓ
5 முனிகள் (ம்+உ=மு) ம் ஓ+ம் = ஓம்
இவற்றை, சமண இலக்கியங்களில் பயின்று வருவதையுங் காணலாம்.
“அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ்
செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோரைந்துஞ் சேர்ந்து
பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் பின்னுமதன் பெருமை யோரார்
பொறிவழியில் வருநாதர் பொருளில்வரும் பெயர்புனையும் புவனத்தாரே”14
உரை: அறிதற்கு அரிதாகிய குணங்களையுடைய அருகனும்,
சித்தரும், ஆசாரியனும்,உபாத்தியாயனும் குரோதமானது
இல்லாத சாதுக்களும் என்று சொல்லப்படும் திருப்பெயரினுடைய
ஆதியெழுத்துக்களைந்தும் கூடிப்பிறிதற்கரிதாகிய ஓங்காரத்தை
முன்னே சொல்லுவார்; பின்பும் அவ்வோங்காரத்தினுடைய
உற்பத்தியினது மேன்மையைப் பகுத்தறியார், ஐம்பொறியுனுடைய
மார்க்கத்தில் திரிகின்ற தெய்வங்களுக்குப் பொருளில்லாமல்
வறுமையாகிய நாமத்தை அலங்கரித்துச் சொல்லும் உலகத்தார்
என்றவாறு!
விரிவுரை: இதனால் ஓங்காரம் பஞ்சபரமேஷ்டி ஸ்வரூபம் என்பது
கூறப்பட்டது.
மேலும், வடமொழிச் சூத்திரமும்,
“அரஹந்தா அசரீரா ஆயிரியா தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||15
விளக்குவதைக் காணலாம்.
முடிபு: ஓங்காரம் என்பது பஞ்சபரமேஷ்டிகளின் குறியீடு என்பதும்
அவற்றை உச்சரிப்பதால் நம் வினைகள் தொலையும் என்பது திண்ணம்!
இரா.பானுகுமார்,
சென்னை