Home கட்டுரைகள் இலங்கையில் சமணம்

இலங்கையில் சமணம்

by THFiAdmin
0 comment

இலங்கையில் சமணம்

இலங்கையில் சமணம் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஒன்று இருந்திருக்க முடியாது என்று ஒரு சாராரும், இலங்கையில் இருந்திருக்கிறது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள். இலங்கையில் இல்லை, இருந்திருக்க முடியாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் மிக முக்கியமானது.

அந்த காரணம்தான் என்ன?
சமண முனிவர்கள் கடல் தாண்டக் கூடாது என்பது முனிவிரதங்களில் ஒன்று. சமண முனிவர்கள் தங்கள் கடமைகளில் இதை கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும். ஆகையால், இலங்கையில் சமண அறம் பரவியிருக்க முடியாது என்பது அவர்களது வாதம்.

இரண்டாவது காரணம், சமண முனிவர்கள் சமண இல்லறத்தார் (சிராவகர்கள்)இருக்கும் இடங்களுக்குத்தான் செல்வார்களேயன்றி சமண இல்லறத்தார் அல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. அவர்களுக்கு ஆகாரம் இல்லறத்தாரைச் சார்ந்தது. சமண இல்லறத்தாரிடம் மட்டுமே அவர்கள் ஆகாரம் உட்கொள்வார்கள். அதுபோலவே இல்லறத்தார் சமண முனிவர்களைச் சார்ந்து தான் வாழ முடியும். அவர்களின் சிறு சிறு விரதங்கள் கூட சமண முனிவர்கள் அனுமதிப் பெற்றே கடைப்பிடிக்க வேண்டும். இதனால், இரண்டு பிரிவனரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க முடியும். இதை அறநெறிச்சாரம் என்ற தமிழ் சமண நூல் ஒரு பாடலில் அழகாக சுட்டும்.

இந்தக் காரணங்களினால் தான் சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றும் உண்மையானது தான். மறுக்க முடியாது! என்னை?இலங்கையில் இருந்திருக்கிறது!
இப்போது மற்றொரு சாராரின் கருத்தையும் ஈண்டு பார்ப்போம். இலங்கையில் ஒரு காலத்தில் சமணம் நிலைக் கொண்டிருந்தது தான் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்:

மகாவம்சம் என்ற நூல் பெளத்த நூல். இலங்கையில் வாழ்ந்த பெளத்த அரசர்களின் வரலாற்றை கூறும் நூலது. இந்நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்நூல் வழி சமணம் கி.மு.4ஆம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இருந்தமை அறியப்படுகிறது. “பாண்டுகாபயன்” என்பவன் கி.மு. 377-307 வரை இலங்கையை ஆண்ட அரசன். இவன் அனுராதபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தான். அந்த புதுத் தலை நகரத்தில் சைன முனிவர்களுக்கென்று தனியாகப் பள்ளிகள், கோயில்கள் கட்டித்தர ஆணையிட்டான் என்று அந்த நூல் கூறுகிறது. மேலும் அந்த அரசனின் ஆணையின் பேரில் “நிகந்தமலை” என்ற இடத்தில், ‘நிகந்த ஜோதிய“, “நிகந்த கும்பண்ட” என்ற சமண முனிவர்களுக்கு தனி தனியே பள்ளிக்கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்பள்ளிகளுக்கு அந்த அரசனின் பெயரே சூட்டப்பட்டதாக அந்நூல் மேலும் கூறுகிறது.

இவற்றுடன் “ஆசிவகர்களு“க்காகவும் தனியே இடங்களும் கட்டித்தரப்பட்டதாகவும் அது கூறுகிறது.
– Geiger – Mahavamsa, page 97,98,99

(சமணர்கள் என்றால் அது ஆசிவகர்களையும் குறிக்கலாம் தானே என்று சிலஅறிஞர்கள் நினைக்கலாம். நிர்கந்தர்கள் என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும். நிர்கந்தம், நிர்கந்தர், நிகண்டநிகண்டம், நிகண்டவாதிகள் என்பதெல்லாம் சைனத்தையேக் குறிக்கும். மேலும், சமண, ஆசிவக முனிவர்களுக்கென்று தனி தனியே இடங்கள் கட்டித்தரப்பட்டிருப்பதால் “நிகந்த முனிவர்கள்” என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிகனி.)

இதற்கு முன்னமே சமணம் இலங்கையில் கால்கொண்டிருந்தது என்பார் D.G.Mahajan. இவர் “Historical References to Jainism in Lanka Dwip, the Ancient Ceylon, in Buddhist Scriptures” என்ற நூலில் அனுராதபுரத்தில் உள்ள “அபயகிரி தூபத்தில்“கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவைகள் இரண்டும் சைன முனிவர்களின் சிலைகள் என்றும், அவற்றில் ஒன்று சிரவணபெளகோலாவில் உள்ள கோமதேசுவரை ஒத்திருக்கிறது என்கிறார்.

என் கருத்து:
இக்காரணங்களால் கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே சமணம் இலங்கையில் நிலைக்கொண்டிருந்தது என்பது பெறப்படுகிறது. இந்த இரண்டு கருத்துகளும் சரியே. இலங்கை இந்திய கண்டத்தில் இருந்து தனியே பிரியும் முன்னர் சமணம் அங்கே கால் கொண்டு இருந்திருக்கலாம். அது தனியாக பிரிந்த பிறகு சமண முனிவர்களின் வரத்து அற்று போன படியால், பிற்காலத்தில் இலங்கையில் சமணம் மறைந்திருக்கலாம். தற்போது இலங்கையில் உள்ள சில ஊர்களின் பெயர்களில் சமண சொல்லாட்சியும் இதை உறுதிப்படுத்தும். தற்கால சைவர்கள் முன்னம் சமண சிராவகர்களாக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பார் மயிலையார்.

அன்புடன்,

இரா.பானுகுமார்,
சென்னை.

You may also like

Leave a Comment