Home கட்டுரைகள் அறவாழி அந்தணன்

அறவாழி அந்தணன்

by THFiAdmin
0 comment

அறவாழி அந்தணன்

மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார். திருக்குறளில் ஒரு சில குறட்பாக்கள் சமணத்தைக் குறித்திருந்தாலும் சில குறட்கள் சமணத்துக்கு பொருந்துவதாக இல்லையே? என்று தமது மடலில் குறித்திருந்தார். அவர் மேலும் ‘அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடரில் இருக்கும் “அந்தணன்” என்ற சொல் எப்படி அருகனைக் குறிக்கும்? என்று வினவியிருந்தார். அவருக்கு பதில் மடல் எழுதியக் கையோடு எழுத ஆரம்பித்தக் கட்டுரைத் தான் இது!

அறவாழி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” – திருக்குறள் (8)

மேலே கூறப்பட்ட குறளில் வரும் “அறவாழி அந்தணன்” என்றத் தொடர்தான் இங்கு விவாதப் பொருளாக்கப்பட்டு வந்திருக்கிறது. இச்சொற்றொடருக்கு பொருள் என்ன?

1. அறவாழி அந்தணன் – அறக் கடலாகிய அந்தணன் என்று ஒன்றும்,
2. அறவாழி அந்தணன் – அறச் சக்கரத்தை உடைய அந்தணன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் மேலே சொன்ன குறளுக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொருத்தே அந்த குறளின் முழுப் பொருளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
முதலாவது எடுத்துக்கொள்வோம். அறவாழி = அறக்கடல் என்று பொருள் கொண்டால்; அறக்குணத்தைக் கொண்ட அந்தணனை (கடவுளை) பற்றினால் (புணை) பிற (மற்ற) கடல்களை நீந்துதல் எளிது. இதையே புரியும்படி எழுதுகிறேன்.
“ அறக்கடலாகிய அந்தணனனை பற்றினால் பிறத்தலாகிய கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்க்கு பிறவு ஆழியைக் கடப்பதன்பது அரிதாம்’.

இது பொருந்தாதாம் எப்படி?

அந்தணனை (கடவுளை) அறக்கடலாக உருவகித்தால் அவர் பாதத்தை எப்படி புணையாக அல்லது தெப்பமாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடலை உருவகித்து கடலைக் கடக்கச் சொல்வது என்பது பொருள் குற்றம். பொருந்தாது என்னை?

சரி. இரண்டாவதுப் பொருளை எடுத்துக்கொள்வோம். அறவாழி = அற சக்கரம் என்று பொருள் கொண்டால்; அற சக்கரத்தை உடைய அந்தணனை (கடவுளை) பற்றினால் பிறவிக் கடலைக் கடக்கலாம். அஃதாவது,

“தர்ம சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் பற்றினால், பிறவிக் கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்களுக்கு அக்கடலைக் கடக்க முடியாது என்பதாம்”

இங்கே அற சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் புணையாக உருவகித்தால், பிறவாழி; பிறவியாகிய கடலை நீந்திக் கரையேரலாம் என்பது பொருத்தமாக இருக்குமன்றோ!

இது நிற்க!

அந்தணன்

இக்குறளில் உள்ள அந்தணன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அந்தணன் என்ற சொல் வைதீக வேதியர்களைக் குறிக்கிறது என்று பலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அப்படித்தான் அந்த அன்பரும் பொருள் கொண்டு என்னோடு மடலாடினார். அவர் மட்டுமன்று தமிழ்க் கற்ற பெரியோர்களையும் அச்சொல் மயக்கியே வந்திருக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்

திருக்குறளில் நீத்தார் பெருமையென்னும் அதிகாரத்தில் 30ஆவது குறள்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”

அறவோரே அந்தணர்; அத்தோடு இல்லாமல் எந்த உயிருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவரே அந்தணர் என்று அழுத்தம் திருத்தமாக குறள் குறித்திருக்கிறது. அஃதாவது, யாரொருவர் எந்த உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றை யாதொன்றையும் கருதிக் கொல்லாமல் இருக்கிறாரோ அவரே அந்தணர் என்றுப் போற்றப்படுகிறார். இது யான் சொல்லவில்லை. அந்தக் குறள் அப்படித்தான் அந்தணருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. என்னை?

இதனால் அந்தணர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி!

அந்தணர் என்ற சொல் அக்காலத்தில் (குறள் எழுந்தக் காலக்கட்டத்தில்) நிச்சயம் வைதீக பிராமணர்களைக் குறித்திருக்காது என்பது நிதர்சனம். அக்கால வைதிகர்கள் வேத யாகங்களில் மிருகங்களை பலியிட்டிருக்கிறார்கள்.(பார்க்க: நீலகேசி) இதனால் அந்தணன் என்ற சொல் அவர்களைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது.

ஈண்டு முக்கியமான ஒன்றை குறித்துக் கொள்ளவேண்டுகிறேன். அந்தணன் என்றால் அது வைதிக பிராமணனைத் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டால், அப்பகுப்பு முறை ( வருண வேறுபாடு) மனிதர்களுக்கு மட்டுமே உரியது. இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். அவரை அந்தணரோடுத் தொடர்புப்படுத்த முடியாது. இல்லையா?

அறவாழி அந்தணன்

அற சக்கரத்தையுடைய அல்லது தரும சக்கரத்தையுடைய அருகக் கடவுளின் தாளை பாதத்தை பற்றாதவர்களுக்கு பிறவியாகிய கடலை (சம்சார கடலை) கடப்பதன்பது அரிது. இதுவே நேரிதன் உரை. உண்மையான பொருளும் கூட.
இங்கே தர்ம சக்கரத்தை உடைய அருகனின் பாதத்தை புணையாக உருவகித்து, பிறவியைக் கடலாக உருவகித்தால் அந்தக் குறளின் பொருளை நன்கு பருகலாம்.

தர்ம சக்கரம் (அறவாழி)

அருகப் பெருமான் எண்வகை சிறப்பை உடையவர்.

1. அசோக மரம் (பிண்டி)
2. தேவரின் மலர் பொழிவு (மலர் துவுதல்)
3. திவ்வியத் தொனி ( உதடுகள் அசையாமல் வரும் ஒலி)
4. சாமரம்
5. சிம்மாசனம் (அரியாசனம்)
6. தருமச் சக்கரம்
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

மேலே சொல்லப் பட்ட எட்டு சிறப்புகளில் தருமச் சக்கரமும் ஒன்று. (புத்தபிரானுக்கும் இக்குறள் பொருந்தும்)

இலக்கிய ஆதாரங்கள்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே
– திருநூற்றந்தாதி (27)

“ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
– திவாகர நிகண்டு

“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..”
– சூடாமணி நிகண்டு

அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்..”
– பிங்கல நிகண்டு

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
– திருக்கலம்பகம் (25)

(இப்பாடலின் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள் எழுதுகிறேன். ஏன்னென்றால், இப்பாடல் திருக்குறள் ஆராய்வோருக்கு மிக முக்கியமான ஒன்று. (* நேமி என்றால் சக்கரம்)

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
– சீவக சிந்தாமணி (1611)

இவ்வாறு நிறைய இலக்கிய சான்றுகள் காட்டலாம். முடிபாக, யான் நிறைய முறை சொன்னாற்போல் அருக பகவான், நம்மை போல் பிறந்து, உலக மக்கள் உய்ய நல்லறம் பகர்ந்தார். அவரே கொல்லாமை முதலிய அறங்களை பகர்ந்தார், ஆதலில் அந்தணன் என்ற சொல் அருகக் கடவுளைத் தவிர வேறு கடவுளுக்கு பொருந்தாது. ஆராய்ச்சி அறிஞர் மயிலையார் சொல்வார், அறவாழி அந்தணன் என்ற தொடர் மற்ற கடவுளர்களை, ஏன் திருமாலையும் குறிக்காது என்று சான்றுக் காட்டி எழுதியிருக்கிறார். அக்கட்டுரையைக் கீழே உள்ள வலைச்சுட்டியில் படிக்கவும்.

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww–?cq=1&p=11
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
http://www.treasurehouseofagathiyar.net/27900/27927.htm

இரா.பானுகுமார்,
சென்னை

You may also like

Leave a Comment